Mathagal
 
Mathagal Home
Mathagal Member Area
Mathagal Search Members
Mathagal Site Map
Mathagal Contact
 
Mathagal Mathagal Mathagal
  Home
  About Mathagal
  Mathagal News
  Mathagal Events
  Event Calendar
  Search Members
  Mathagal Temples
  Mathagal Schools
  Photo Gallery
  Videos
  Useful Links
  Advertisements
  Site Map
  Temples in Sri Lanka
  Contact us

மாதகல் புனித தோமையார் ஆலயம் (Mathagal St. Thomas Church)

 யாழ் மாதகல் புனித தோமையார் ஆலய வரலாறு.

 
இந்து சமுத்திரத்தாற் சூழப்பட்ட ஈழநங்கையின் வடபகுதியில் விளங்கும் யாழ்ப்பாண நகரின் வடமேற்குக் கடலோரமாக மாதகல் என்னும் பெயர்கொண்ட சரித்திரப் பெருமை வாய்ந்த கிராமம் உள்ளது.

அக்காலத்தில் பாரதத்தின் குருகுல மன்னனின் வழித்தோன்றல்களாகிய தமிழ் மக்கள் மாதகலை இருப்பிடமாகக் கொண்டு வணிகம், மீன்பிடி, வேளாண்மை, வைத்தியம், ஆசிரியர் ஆகிய தொழில்களைக் கைக்கொண்டு சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். 

நெய்தலும், மருதமும் கொஞ்சும் நிலமாக, வணிகமும் கலையும் கலக்கும் நதியாக மிளிரும் மாதகல் கிராமத்து முன்னோர்கள் சமய வழிபாட்டில் இந்துக்களாகவே இருந்தனர்.

ஆனால் 17ம்,18ம் நூற்றாண்டுகளில் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த ஐரோப்பிய துறவிகளாலும், வண.யோசவ்வாஸ் அடிகளாராலும் கிறிஸ்துவின் போதனை பெற்ற ஒரு பகுதியினர் சத்திய திருச்சபையில் நிலை கொண்டனர்.

 அன்றைய காலத்தில் மாதகல் கத்தோலிக்க மக்கள் அனைவரும் கீழைத்தேய போதகர் புனித சவேரியாரையும், புனித அந்தோனியாரையும் தம் பாதுகாவலராகக் கொண்டு சிறு ஆலயம் அமைத்து வழிபட்டனர்.

குடிமக்கள் பெருகியதனால் 17ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்ட தேவதாயின் மாசற்ற திரு இருதய ஆலயத்தின் அத்திவாரத்தை இன்றும் மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு அருகில் காணலாம். 

வருடந்தோறும் ஆவணி மாதத்தில் திரு இருதய அன்னைக்கு மக்கள் விழா எடுத்து வந்தனர்.

இவ்வாலயத்தின் முதல் மூப்பராக சடையர் சந்தியாப்பிள்ளையின் தகப்பனார் பிறாஸ்பிள்ளையையும், முதல் சங்கிலித்தானாக சந்தியாகோ பாவிலுப்பிள்ளையின் மகனான ஆசிரியர் அந்தோனிப்பிள்ளையையும் அப்போதைய அதி வந்தனைக்குரிய மேற்றிராணியார் நியமித்தார்.

 புனித தோமையார் ஆலயத்தின் அருகாமையிலமைந்திருந்த மூப்பரினதும், சங்கிலித்தாரினதும் இல்லங்கள் இருந்த இடங்கள் தற்போதும் சடையர் வளவு, ஞானியார் வளவு என அழைக்கப்படுகின்றன.

 திரு இருதய அன்னையின் அருளைப் பெற வந்தவர் அனைவருக்கும் தேவதாயார் அருள்மாரி பொழிந்து புதுமைகள் பல புரிந்ததனால் அன்னைக்கு ”மாதகல் செல்வி” என மறுநாமம் சூட்டலாயினர் என்று வரலாறு சான்று பகருகின்றது.

இவ்விதம் இறைகுலம் கொண்ட எம் மக்கள் ஆழ்கடல் ஓடி மீன் பிடிப்பதுடன் நின்று விடாது திரைகடல் ஓடி திரவியம் தேடும் கப்பல் ஓட்டும் தமிழராகவும் வாழ்ந்தனர். 

இத் தொழிற்பாடானது கிறிஸ்துநாதரின் பிரிய சீடனாகிய புனித தோமையாரின் காலடி தோய்ந்த இந்தியா தேசம் புதுமைகள் கண்ட புகழ் இடங்களான சென்னையிலுள்ள சாந்தோம், பறங்கி மலை எனப்படும் 300 அடி உயரமான மலைக்குன்றில் ஈட்டிகளால் குத்தப்பட்டு வேதசாட்சியாக மரித்த புமதானப் புண்ணிய தலம், மைலாப்புரில் புனிதரின் தேவாலயம் இவைகளையெல்லாம் தொடர்புற வைத்தது. 

புனித தோமையார் கிறிஸ்துவை நேரில் கண்டு வாழ்ந்து, அவரது நற்செய்தியைப் பரப்புவதற்காய் பாரத தேசம் வந்து போதனைகள் செய்து, புதுமைகள் புரிந்து அதே கிறிஸ்துவுக்காய் தம் குருதி சிந்தி உயிரையே அர்ப்பணித்த அப்போஸ்தலரும் தேவசாட்சியும் ஆவார். 

அன்னாரின் அருள்வளங்களைப் பெற்றதனால் புதிதாகக் கட்டியெழுப்ப இருக்கும் ஆலயத்திற்கு புனித தோமையார் நாமத்தைச் சூட்ட விரும்பினர்.

1847இல் வண.விஸ்தறீனி அடிகளாரால் சிறிய கொட்டிலாக புனித தோமையார் ஆலயம் நிறுவப்பட்டது. அப்போதிருந்த பங்குத்தந்தை சௌனல் அடிகளாரின் வரைபடத்தின் திட்டத்திற்கமைய மகா வந்தனைக்குரிய பொஞ்சீன் ஆண்டகை அவர்களால் 1868ம் ஆண்டு புனிதரின் தினமான மார்கழி 21ம் திகதி ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலையும் ஆரம்பமானது.

 குறுகிய காலத்தில் இது பெரிய ஆலயமாகத் திகழ்ந்தமைக்கு மக்கள் அளித்த உற்சாகம் மிகப்பெரிது. பத்தில் ஒன்று காணிக்கை என்பது சட்டமாக இருந்த போதிலும் உழைப்பில் ஐந்தில் ஒரு பங்கு மனமாரக் கொடுத்தனர். 

வணிகரின் ஒத்துழைப்பும் வளமாகக் கிடைத்தது. மேலும் ஆயர் பொஞ்சீனின் ஆட்சிக் காலத்திலேதான் தியான சபையாரின் காலமுதல் கொட்டில்களாக இருந்த கோயில்கள் கல்லும் சாந்தும் கொண்டு கட்ட முறையான முயற்சி எடுக்கப்பட்டது என வரலாறு சான்று பகருகின்றது.

மாதகல் கத்தோலிக்க மக்களின் முயற்சியாலும், அப்போதைய பங்குத்தந்தையின் விடா முயற்சியினாலும் புனித தோமையார் ஆலயம் வானளாவும் ஆலய முகப்புடன் முடிவுற்று அதே ஆயரால் 1884ம் ஆண்டில் ஆசீர்வதிக்கப்பட்டது. 

1886ம் ஆண்டில் கல்லறைச் சொரூபம் வைக்கப்பட்டது. 1889இல் குருசுக்கோவிலாக அமைந்த வளைமாட அமைப்பு புர்த்தியாயிற்று. 

பரந்த ஆலய பலிபீடத்தைச் சூழ அமைந்த நாலு தூண்களின் உள்பாகத்தில் நான்கு சம்மனசுகளின் உருவம் வடிக்கப்பட்டதாகவும், நான்கு தூண்களில் நின்றே விசிறப் பெற்ற எட்டு வில்லுகளால் பக்கச்சுவர்களை இணைத்து குருசுக் கோவிலாகவும், முன்புறத்தில் வானளாவும் அழகிய முகப்பைக் கொண்டதாகவும், நடுக் கோவிலுள் தூண்கள் இல்லாமலும், வெளிப்பக்கங்கள் இரு மருங்கிலும் விறாந்தைகள் கொண்டதாகவும் அமைக்கப்பெற்றிருக்கின்றது.

 மேலும் கோவிலின் உள் பூச்சும், பல வர்ணக் கண்ணாடி ஜன்னல்களும் 1897 – 1899ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் செய்யப்பட்டது.

 வெளிப்பக்கமாக இருமருங்கிலும் விறாந்தை 1910 – 1913 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் செய்யப்பட்டது. வெளிப்பக்கமாக இரு மருங்கிலும் விறாந்தை 1910 – 1913 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் செய்யப்பட்டது.

 மாபிள் தளக்கற்களும், கோவில் பீடமும், வெளிமதில் புச்சும் 1911ம் ஆண்டு செய்யப்பட்டது. 1914 – 1915 ஆம் ஆண்டில் பாரிய குருமனை கட்டப்பட்டது. ஆலயத்தின் வலது கைப்பக்கத்தில் பரிசுத்த லூர்து நாயகியின் பெரிய திருச்சொரூபத்திற்கு மொறட்டுவாவிலிருந்து சித்திர ஆச்சாரியர்களைக் கொண்டு அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த பலிப்பீடம் 1916 – 1917 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. 

புனித தோமையார், புனித அந்தோனியார், புனித சூசையப்பர், திரு இருதய ஆண்டவர் ஆகியோரின் பெரிய திருச்சொரூபங்கள் 1917 – 1918 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டன. 

கல்லறைச் சொரூபப் பீடமும், திரு இருதயமாதா பீடமும், சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்த பிரசங்க மேடையும் ஆலயத்தில் உள்ளன.

வணபிதா. எஸ்.ஏ.ஞானப்பிரகாசம் அவர்களின் காலத்தில் சதாசகாய அன்னைக்கு சலவைக் கற்களால் பீடம் அமைக்கப்பட்டதுடன் இக்காலப்பகுதியிலேயே சலவைக் கற்களால் ஆசீநீர்த்தொட்டி, ஞானஸ்ஞானத்தொட்டி என்பனவும் அமைக்கப்பட்டன. 

1959 – 1960 காலப்பகுதியில் பலிப்பீடத்தைச் சூழ அமைந்த நான்கு நற்செய்தியாளர்களின் உருவம் பொறிக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் ஆலயத்தின் கூரை ஓடுகள் முழுமையாகக் கழற்றப்பட்டு மரங்கள், சிலாகைகள் மாற்றப்பட்டதுடன் ஓடுகளும் கழுவப்பட்டுத் திரும்பப் போடப்பட்டன. 

ஆலயத்தின் கதவுகளும் மாற்றப்பட்டன. வண.பிதா எல்.யோசெப் அ.ம.தி. பங்குத்தந்தையாக இருந்த 1968 – 1976 இற்கு இடைப்பட்ட காலத்தில் இறைவணக்கத்திற்கும், வசதிக்கும் ஏற்றாற்போல் பலிபீடக்கட்டுக்கள், படிகள் எல்லாம் நீக்கப்பட்டு கல்வாரி மலைக் காட்சி முன்னுருவாகத் தோன்ற நற்கருணைப் பீடம் அதன் அடியில் நிறுவப்பட்டது.

 சிலுவைப்பாதைப் படங்களுக்குப் பதிலாக சொரூபங்கள் அமைக்கப்பட்டன. 1983ம் ஆண்டு லூர்து அன்ன பவனி வரும் தேர் செய்யப்பட்டது. மேலும் 1984ம் ஆண்டு புனித தோமையாரின் நூற்றாண்டு விழா நாட்டுச் சூழல் காரணமாக மிகவும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.

 1988இல் பங்குத்தந்தையாக இருந்த வண.பிதா றெஜி இராஜேஸ்வரன் அடிகளாரால் பலிப்பீடத்தின் தூரமாக அமைந்திருந்த நற்கருணைப்பேழை பலிப்பீடத்துடன் அமைக்கப்பட்டது. இத்தகைய ஊக்கத்துக்கும், ஆக்கத்துக்கும், மாற்றத்துக்கும் மக்களை வழி நடத்திய பங்குத்தந்தையர்களே மூலக்காரணர். அன்றியும் கோவில் நிர்வாகத்தை நடாத்தும்  எட்டுத்தானியக்காரர்களின் சேவையும் மறக்க முடியாது.

புனித தோமையார் ஆலயத்தின் முகப்பின் முன்பு இரும்புக்கேடராற் செய்யப்பட்ட உயரமான மணிக்கூட்டில் பெரிய இரு ஆலய மணிகள் தொங்குகின்றன.

 1925இல் சிறிய மணிக் கூண்டில் மேலைத்தேய பெருமணி ஏற்றி வைக்கப்பட்டது. பின்பு அதே காலப்பகுதியில் மருதமடுப் பரிபாலகராகவிருந்த வண.பிதா எச்.உத்தீன் (சின்ன) அடிகளாரின் மேற்பார்வையில் மருதமடுத்தொழிலாளரால் கட்டியெழுப்பப்பட்ட தற்போது இருக்கும் மணிக்கூட்டுக் கோபுரத்தில் 1931ம் ஆண்டு மாசி மாதம் 25ம் திகதி ஆலயத்தின் பெரிய மணி ஏற்றி வைக்கப்பட்டது.

மக்களின் கல்வியானது ஒழுக்கமுடன் அருட்கன்னியரால் நிருவகிக்கப்பட வேண்டுமென்பதால் 1910ம் ஆண்டில் ஆலய வளவினுள் திருக்குடும்பக் கன்னியர் மடம் கட்டப்பட்டது. 

இதுவே யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட திருக்குடும்பக் கன்னியரின் இரண்டாவது மடமாகும். திருக் குடும்பக் கன்னியரின் அர்ப்பணிப்பான சேவையால் எமது பங்கும், ஆலயமும் 1992இன் இடப்பெயர்வுவரை ஈடில்லாப் பயன்பெற்று வந்தன.

 மேலும் 1953இல் ஆலய வளவினுள் நிறுவப்பட்ட வாசிகசாலை இன்று தோமையார் பங்கு மண்டபமாகத் திகழ்கின்றது. இவை யாவும் ஆலய மக்களின் ஆன்மீக தாகத்தையும், இறை பக்தியையும், கலை ஆர்வத்தையும் பறைசாற்றுகின்றன. 

இவ் ஆலய மக்களின் முன்னோர் நாடகக் கலையில் ஆர்வங்கொண்டு விளங்கினர். இதற்கு ஆதாரமாக ஆலய வளவினுள் கூத்துமேடை இன்றும் காட்சி அளிக்கின்றது. இக்கூத்து மேடையின் கூரை, அடித்தள வேலைகள் அருட்பணி எ.சி.கிறிஸ்தோப்பர் அடிகளாரால் பூர்த்தியாக்கப்பட்டன. 

புனித தோமையார் ஆலயத்தின் நிர்வாகம் பங்குத்தந்தையின் தலைமையில் நவநாள் தானியக்காரரால் நடாத்தப்பட்டு வந்தன. 2004ம் ஆண்டில் அன்பியக் குழுமங்கள் அமைக்கப்பட்டு அக்குழுமங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் ஆலய அருட்பணிச்சபை உருவாக்கப்பட்டது. இவ் அன்பியக் குழுமங்கள் தற்போது ஆலய வழிபாடுகளைச் சிறப்பித்து வருகின்றன.

புனித தோமையார் வேதசாட்சியாக மரித்த மார்கழி மாதம் 21ம் திகதி திருச்சபையால் புனிதரின் திருநாளாக நியமிக்கப்பட்டிருந்தமையால் இத் தினமே புனிதரின் திருவிழா நாளாக ஆதிகாலம் முதல் கொண்டாடப்பட்டு வந்தது.

 இரண்டாம் வத்திக்கான சங்கம் புனிதரின் திருநாளை ஆடி மாதம் 3ம் திகதியாக மாற்றியபோதும் அண்மைக்காலம் வரை மார்கழி மாதம் 21ம் திகதியே புனிதரின் திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆயினும் 2008ம் ஆண்டில் ஆலய அருட்பணிச்சபையினர் அப்போதைய பங்குத்தந்தை ஆர்.எம்.ஜி.நேசநாயகம் அடிகளாருடன் இணைந்து எடுத்த முடிவின்படி 2009ம் ஆண்டு முதல் திருநாள் ஆடி மாதம் 3ம் திகதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

1992ம் ஆண்டு ஆவணி மாதத்தில் யுத்தம் காரணமாக மாதகலிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த வேளையில் ஆலயம் ஷெல் வீச்சினால் கூரைகள் சேதமடைந்து சோபையிழந்து விளையாட்டு மைதானமாக்கப்பட்டுக் காணப்பட்டது. 

1996இன் பின் மக்கள் படிப்படியாக மீளக்குடியேற ஆரம்பித்ததைத் தொடர்ந்து 2000ம் ஆண்டில் அப்போது பங்குத்தந்தையாக மீண்டும் பொறுப்பேற்றிருந்த அருட்பணி றெஜி இராஜேஸ்வரன் அவர்களால் ஆலயம் புனரமைக்கப்பட்டது. 

2010இல் அருட்பணி எஸ்.எம்.பி.ஆனந்தகுமார் அடிகளாரால் ஆலயம் மீளவும் புனரமைக்கப்பட்டுக் கூரையின் ஓடுகளுக்குப் பதிலாக கூரைத்தகடுகள் போடப்பட்டதுடன் ஆலயத்தின் பலிப்பீடம் மாபிள் கற்கள் பதிக்கப்பட்டுப் புதுப்பொலிவு பெற்றது. 

2010இல் புனித தோமையார் ஆலயத்தின் நூற்றாண்டு விழா ஆடி மாதம் 3ம் திகதி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church

Mathagal St. Thomas Church