மாதகல் நுணசை முருகன் ஆலயம் (Mathagal Nunasai Murugan Kovil)
ஈழத்தில் உள்ள தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஈழத்திலேயே கடம்பமரத்துடன் கூடிய கந்தன் ஆலயம் இதுதான் எனச் சொல்கிறார்கள். இக் கடம்பமரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் ஈழத்திற்கு வரும் போதெல்லாம் இந்த ஆலயத்திற்கு வந்து இவ் ஆலயத்தைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம்.
ஈழத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் முருகனை ஒவ்வொரு பெயரால் அழைப்பார்கள். நல்லூர் முருகனை அலங்காரக் கந்தன் என்பர். செல்வச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் முருகனை அன்னதானக் கந்தன் என்பார்கள். எமது ஊரில் எழுந்தருளியிருக்கும் முருகனை காவடிக் கந்தன் என்பார்கள். திருவிழாக் காலங்களில் தமது நேர்த்திக்கடனை காவடிகள் எடுத்துச் செலுத்துவார்கள். ஈழத்தில் உள்ள ஆலயங்களில் அதிகளவு காவடி இக் கோவிலில் தான் எடுக்கப்படும். அதனால் காவடிக் கந்தன் என்றழைப்பர்.